கரோனா பாதிப்பால் உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரிக்கு, பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், " சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்பாராத இழப்பான ஆஷிஷ் மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், " அன்புள்ள சீதாராம் யெச்சூரி, ஆஷிஷின் இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான நேரத்தில் எங்களின் எண்ணங்கள் உங்களுடனும், குடும்பத்தினருடனும் தான் உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில், "மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகனை இழந்து வாடும் தோழர் யெச்சூரிக்கு இந்த சோகத்தை தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " ஆஷிஷ் யெச்சூரியின் மறைவு செய்தி மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தங்கள் அன்பு மகன் ஆஷிஷ் யெச்சூரி கரோனா தாக்கி இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குடும்ப உறுப்பினரின் மறைவை, ஆறுதல் மொழிகள் ஆற்றுப்படுத்தி விட முடியாது. இப்பெரும் துயரில் இருந்து நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மீண்டு வரும் ஆற்றலை அளித்திட, இயற்கைத் தாயை இறைஞ்சுகின்றேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம்