ராய்காட் (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இடர்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என மாநில அரசு அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் உதய் சமந்த், கிரிஷ் மகாஜன் மற்றும் தாதா பூஸ் ஆகியோர் இர்சல்வாடி கிராமத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மீட்புப் பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "மீட்புக் குழு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இடர்பாடுகளில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவதே மாநில அரசின் முதன்மையான பணி. இந்திய விமானப் படையின் (IAF) உதவியையும் மாநில அரசு நாடியுள்ளது.
மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்கள் தயாராக இருக்கும் நிலையில், காலநிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. இரண்டு மலைகளுக்கு இடையே இந்த கிராமம் அமைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மீட்புப் பணிகளில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது" என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கேட்டறிந்ததாகவும், மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் என உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், நான்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அங்கிருந்து மக்களை மீட்பதும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதும் மத்திய அரசின் முதன்மையான பணி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லமால், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் (டிசிஎம்) அஜித் பவார் மும்பையில் உள்ள 'மந்த்ராலயா'வின் அவசர கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். இதற்கிடையே மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பகுதியில் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், அந்த மண்டலத்தின் கீழ் உள்ள ராய்காட் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், இர்சல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிக்கல் நீடிக்கிறது.
இதையும் படிங்க: Manipur violence: மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம் - பிரதமர் மோடி கண்டனம்!