திருப்பதி (ஆந்திரா): தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் மீனா தம்பதியர், தங்கள் இரண்டு மகன்களுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று (அக்.2) இரவு திருப்பதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளனர்.
திருப்பதி அடிவாரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, இன்று (அக்.3) அதிகாலை 2.20 மணிக்கு தனது இரண்டரை வயது மகன் அருள்முருகன் மாயமானது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சந்திரசேகர் மற்றும் மீனா தம்பதி அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். குழந்தை கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனடியாக திருப்பதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருப்பதி காவல் துறையினர், குழந்தை காணாமல் போன சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக குழந்தை காணாமல் போன திருப்பதி அடிவாரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தூங்கிக் கொண்டு இருக்கும் குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கிச் செல்லும் காட்சி இடம் பெற்றதை பார்த்துள்ளனர். இதனையடுத்து குழந்தை கடத்தப்பட்டு இருப்பது காவல் துறையினருக்குத் தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெங்களூருவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து - தாயும், மகளும் உடல் கருகி உயிரிழப்பு!
இதனையடுத்து துரிதமாகச் செயல்பட்ட திருப்பதி காவல் துறையினர், குழந்தை கடத்தல் குறித்து 5 தனிப்படைகளை அமைத்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தனிப்படையினர் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, குழந்தை அருள்முருகன் மாதவ மலைப்பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், உடனடியாக அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் குழந்தையை மீட்டுள்ளனர். மீட்ட குழந்தையை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், குழந்தை கடத்தலில் ஈடுபட்டது யார் என்று காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அப்போது குழந்தையைக் கடத்தி சென்றது சுதாகர் என்ற நபர் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது சுதாகரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தையைக் கடத்திய 12 மணி நேரத்தில் அக்குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது!