ஒருபுறம் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் வாகனங்களும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன.
இத்தகைய பொருளாதார மந்தநிலைக்கு இடையே, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், புல்லட் வாகனம் போல் தோற்றமளிக்கும் மிதிவண்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த வாகனத்தை இவர் பழைய உதிரி பாகங்களில் இருந்து உருவாக்கியிருப்பதுதான் அதன் தனிச்சிறப்பு.
மலப்புரம் மாவட்டம், தனூர் நகரைச் சேர்ந்த லிஜீஷ் எனும் இந்த நபர், தான் உருவாக்கிய இந்த வாகனத்திற்கு 'புல்சி' என்று பெயரிட்டுள்ளார். இரண்டு புதிய டயர்களைத் தவிர, இந்த வாகனத்தில் உள்ள அனைத்தும் பழைய வாகன உதிரி பாகங்களே.
இந்நிலையில், இந்த வாகனம் குறித்து ஊடகங்களிடம் பேசிய லிஜீஷ், "எரிபொருளின் விலையை கருத்தில் கொண்டே பலரும் மோட்டார் சைக்கிள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், எரிபொருள் தேவையில்லை என்பதால் 'புல்சி' பிரச்சினையை தீர்க்கிறது.
உடலுக்கும் இது ஒரு நல்ல பயிற்சியாகும். இந்த தனித்துவமான யோசனை கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபோது எனக்கு உதித்தது. பெட்ரோல் விலை உயர்வை மனதில் கொண்டே இந்த யோசனை என்னுள் உதித்தது" என்றார்.
இந்த 'புல்சி' வாகனத்தைக் கட்டமைக்க தனக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் லிஜீஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த்!