காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே இருவரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில், காந்தி குடும்பத்தின் முழு நம்பிக்கையும் ஆதரவும் பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கே வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், சசி தரூரின் நவீனத்துவமான அணுகுமுறை, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போராட முக்கியமானது என்றும், இந்த சூழ்நிலையில் கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 2 வேட்பாளர்களில் யாருக்காவது ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்பினால் முதலில் கட்சிப் பதவிலிருந்து விலக வேண்டும் என்ற தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்