பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள இத்கா மைதானத்தில், விநாயகர் சதுர்த்தி வழிபாடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று (ஆக. 30) தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், பெங்களூரு சம்ராஜ்பேட்டை இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஹூப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இத்கா மைதானத்திலும், விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த அனுமதி அளித்து தார்வாத் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அஞ்சுமன்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதி அசோக் எஸ். கிணாகி நேற்று (ஆக.30) நள்ளிரவில் விசாரணை மேற்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, தார்வாத் மாநகராட்சி அளித்த உத்தரவு செல்லும் எனக்கூறி வழிபாட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
தார்வாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஹூப்பள்ளி மைதானத்தை, அஞ்சுமான்-இ-இஸ்லாம் அமைப்பு 999 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் குத்தகைக்கு எடுத்துள்ளது. 1991 சட்டப்பிரிவின் படி, பொதுச்சொத்தை மத வழிபாட்டுத் தலமாக மாற்றக்கூடாது. ஹூப்பள்ளி மைதானம், பொதுச்சொத்து என்பதால் அங்கு விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தக்கூடாது என இஸ்லாமிய அமைப்பு வாதிட்டது.
மேலும், அங்கு பக்ரித் மற்றும் ராம்ஜான் பண்டிகைகளின்போது, தொழுகைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது எனவும் வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற நேரங்களில், இந்த மைதானம் சந்தையாகவும், வாகனங்கள் நிறுத்திமிடமாகவும்தான் பயன்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை மைதானத்திற்கு அளித்த உத்தரவு இதிலும் செல்லுபடியாகும் என இஸ்லாமிய அமைப்பு வாதிட்டது. அதற்கு, மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், பெங்களூரு இத்கா மைதானப் பிரச்சனை என்பது மைதானத்தின் உரிமையாளர் யார் என்பதை முடிவு செய்வது தொடர்பானது என்றும் இந்த வழக்கிற்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளித்தது.
இதனை தொடர்ந்து, ஹூப்பள்ளி மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், அஞ்சுமான்-இ-இஸ்லாம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மூன்று வயது சிறுமியை ஹிஜாப் அணிய வற்புறுத்திய பள்ளி மீது பெற்றோர் புகார்