ராஞ்சி: கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது பெயரில் நிலக்கரி சுரங்க உரிமத்தைப் பெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் பாஜகவினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக செயல்பட்டிருப்பதாகவும், அதனால் அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டால், முதலமைச்சர் பதவியும் பறிக்கப்படும். ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை இழந்தால், அவரது மனைவி கல்பனா சோரன் முதலமைச்சராகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தகுதி நீக்கம் தொடர்பாக தகவல் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தை பாஜக முழுமையாக கையில் எடுத்துள்ளது என்றும், இதில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை என்பது பாஜகவினரின் பரிந்துரை தான் என்றும் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பில்கிஸ் பானு வழக்கு... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு...