செரைகலா : ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 24 வயதான தப்ரஸ் அன்சாரி, கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், செரைகலா - கர்ஸ்வான் மாவட்டத்தில், ஒரு வீட்டில் இரு சக்கர வாகனத்தை திருட முயற்சித்ததாக 24 வயதான தப்ரஸ் அன்சாரி என்பவரை கிராம மக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் தப்ரஸ் அன்சாரியை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் உள்ளிட்ட வார்த்தைகளை கூறுமாறு கிராம மக்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தொடர்ந்து தப்ரஸ் அன்சாரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தப்ரஸ் அன்சாரிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். தப்ரஸ் அன்சாரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அன்சாரியின் மனைவி புகார் அளித்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தப்ரஸ் அன்சாரி மீது தாக்குதல் நடத்தியதாக கிராம மக்கள் 13 பேர் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில், போதிய முறையில் விசாரணை நடத்தவில்லை என இரண்டு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட 13 பேரில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தனர். மேலும் போதிய ஆதாரங்கள் இல்லை என இரண்டு பேரை நீதிபதிகள் விடுதலை செய்தனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் முக்கிய நபர் ஏற்கனவே நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஜூலை 5ஆம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், தப்ரஸ் அன்சாடி கொலை வழக்கில் இன்று (ஜூலை. 5) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் மண்டல், பீம் சிங் முண்டா, கமல் மஹதோ, மதன் நாயக், அதுல் மஹாலி, சுனாமோ பிரதான், விக்ரம் மண்டல், சாமு நாயக், பிரேம் சந்த் மஹாலி மற்றும் மகேஷ் மஹாலி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங் காவல் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 24 வயது இளைஞர் தப்ரஸ் அன்சாரியை கிராம மக்கள் அடித்து துன்புறுத்திய வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கு, ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு பின் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செரைகலா - கர்ஸ்வான் மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் ஷெகர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இதையும் படிங்க : மின்னல் தாக்கி 26 பேர் பலி... பீகாரில் பேரிடர் அவசரநிலை?