டெல்லி: இந்தியாவில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஜன் தன் யோஜனா (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் இந்தியாவின் நிதி சேர்ப்பு கொள்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 50 கோடிக்கும் அதிகமான மக்கள் முறையான வங்கி அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய நிதி சேமிப்பு கொள்கை திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் 9ஆம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டம் இந்தியாவின் நிதி சேமிப்பு கொள்கையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் 55.5 விழுக்காடு வங்கிக் கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் வளர்ந்து வரும் கிராமங்களைச் சேர்ந்த 67 விழுக்காடு மக்கள் நிதி சேமிப்பு கொள்கை திட்டத்தின் கீழ் வந்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாத கணக்குப்படி 14.72 கோடியாக இருந்த வங்கிக் கணக்கு, தற்போது 3.4 மடங்கு அதிகரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி நிலவரப்படி 50.09 கோடியாக உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதேபோல மொத்த சேமிப்புத் தொகை 2015 மார்ச் நிலவரப்படி 15 ஆயிரத்து 670 கோடியாக இருந்த நிலையில் 2023 ஆகஸ்ட் மாத நிலவரப்படி அது 2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும், சராசரி வைப்புத் தொகை, 2015ஆம் ஆண்டு நிலவரப்படி ஆயிரத்து 65 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது மூன்று மடங்கு அதிகரித்து 4 ஆயிரத்து 63 ரூபாயாக உள்ளது எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி இந்த வங்கிக் கணக்கைத் தொடங்கிய வாடிக்கையாளர்கள் 34 கோடி பேருக்கு இலவச ரூபே ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 58 சதவீதமாக இருந்த சீரோ பேலன்ஸ் கணக்குகள், தற்போதைய மொத்த வங்கி வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய மொத்த எண்ணிக்கையில் 8 சதவீதமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜன் தன் யோஜனா தலைமையிலான 9 ஆண்டுக்கால தலையீடு மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை நிதி சேமிப்புக் கொள்கை உள்ளடக்கத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், வங்கிகள், பங்குதாரர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் இந்த திட்டம் நாடு முழுவதும் பரந்து விரிந்து பரவி நிற்கிறது எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: Chandrayaan 3: "அடுத்த 14 நாட்கள் மிகவும் முக்கியமானவை" - இஸ்ரோ தலைவர் சோமநாத்!