ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, ஒன் வெப் இந்தியா 2 திட்டத்தில் அதிக எடை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. பிரிட்டனைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியட்ஸ் லிமிடட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இஸ்ரோ, அந்த நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
இன்று (மார்ச். 26) காலை 9 மணிக்கு ஆந்திரப்பிரதேசம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஒன் வெப் திட்டத்தின் மூலம் தற்போது உள்ள தொலைத்தொடர்புக்கு மாற்றாக, உலகில் எந்த மூலையில் இருந்தும் நேரடியாக செயற்கைக்கோள் மூலம் பயனர்கள் தொலைத்தொடர்பை சேவையை பெற உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒன் வெப் திட்டத்தின் மூலம் 618 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் படி பிரிட்டனைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியட்ஸ் லிமிடட் நிறுவனத்துடன் சேர்ந்து இஸ்ரோ செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி முதற்கட்ட 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
இந்நிலையில், 2வது கட்டமாக அதே நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் எல்விஎம் - 3 ராக்கெட்டில் விண்ணிற்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஒன் வெப் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான உறவு மேம்படுத்துதல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக இந்த திட்டத்திற்கான செயற்கைக்கோள்களை ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தான் விண்ணில் ஏவி வந்தது. ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நெட்வொர்க் அக்சஸ் அசோசியட்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து, இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உள்ளது.
ஒன் வெப் திட்டத்திற்காக மொத்தம் 618 செற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட வேண்டிய நிலையில், அதில் 582 செயற்கைக் கோள்கள் ஏற்கனேவ ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மூலம் ஏவப்பட்டு விட்டன. இதன் கடைசி தொகுப்பை தான் தற்போது இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை எல்விஎம்-3 ராக்கெட்டாக மாற்றிய இஸ்ரோ, அதன் மூலம் 5 ஆயிரத்து 805 கிலோ எடையுள்ள 36 முதல் தலைமுறை செயற்கைக்கோள்களை புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Security Breach: பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் குளறுபடியா? - பிரதமரை நோக்கி ஓடிய இளைஞரால் பரபரப்பு!