டோரண்டோ : கனடாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இந்தியாவை சேர்ந்த 2 பயிற்சி விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பைபர் பிஏ-34 செனெகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானத்தில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பயிற்சி விமானிகள் உள்பட 3 பேர் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தில் பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். அந்த விமானம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான்கூவருக்கு அருகில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை மீட்டு விசாரணை நடத்தும் பணியில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் 25 வயதான அபய் காத்ரு மற்றும் யாஷ் விஜய் ராமுகடே என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. இருவரும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.
இவர்களுடன் மற்றொரு நபரும் அந்த விமானத்தில் இருந்த நிலையில், மூன்று பேருமே விபத்தில் உயிரிழந்து உள்ளனர். நல்வாய்ப்பாக விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் குடியிருப்புகள் எதுவும் இல்லை என்றும் அதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கனடா போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த அபய் காத்ரு மும்பையின் வசை பகுதியைச் சேர்ந்தவர். விமானி பயிற்சிக்காக அவர் கனடா சென்று இருந்த நிலையில், அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ஆத்திபள்ளி பட்டாசு கடை விபத்து : கடை உரிமையாளர், மகன் கைது! 3 பேருக்கு வலைவீச்சு - கர்நாடக டிஜிபி தகவல்!