டெல்லி : வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களின் குளிர்சாதன மற்றும் முதல் தர வகுப்புகளின் கட்டணத்தை 25 சதவீதம் குறைத்து இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பயணிகளிடையே ரயில் பயணங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விரைவு ரயில்களின் குளிர்சாதன பெட்டிகள், எக்ஸிக்யூடிவ் வகுப்புகள் மற்றும் சதாப்தி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களில் உள்ள சொகுசு பெட்டிகளான அனுபதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகளின் கட்டணத் தொகையில் 25 சதவீதத்தை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த 25 சதவீத கட்டண குறைப்பு சலுகை, அடிப்படை டிக்கெட் விலையில் இருந்து மட்டுமே குறைக்கப்படும். ஜிஎஸ்டி, முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கூடுதல் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் எந்த வித மாற்றமும் இன்றி தொடரும் என இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடனடி அடிப்படையில் இந்த கட்டணச சலுகை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப தரப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ரயில்களில் குறிப்பிட்ட வகுப்பில் இந்த கட்டணத் திட்டம் பொருந்தி இருந்தால் மற்றும் இருக்கை பற்றாக்குறை மோசமாக இருந்தால் மட்டுமே கட்டணம் திரும்பப் பெறப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருக்கை பற்றாக்குறையின் அடிப்படையில் இந்த சலுகைக் கட்டணம் வழங்கப்படலாம் என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. சிறப்பு ரயில்கள், விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் விடப்படும் சிறப்பு ரயில்களுக்கு இந்த கட்டணத் திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பயணத்தின் கடைசி 30 நாட்களில் இருக்கை பற்றாக்குறை 50 சதவீதம் என்ற அளவிற்கும் குறைவாக இருக்கும் நிலையில் இந்த கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களில் நிலவும் அதிக கட்டணம் காரணமாக அதன் மீதான பயணிகள் எண்ணம் மாறுபட்ட வகையில் காணப்படும் வகையில் இந்த கட்டணச் சலுகை திட்டத்தை இந்திய ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு புதிவித அனுபவத்தை தரும் அனுபதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகளின் கட்டணத் தொகையும் குறைக்கப்பட்டு உள்ளது பயணிகளிடையே வரவேற்பை பெற்று உள்ளது. சதாப்தி உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில்களில் இந்த சிறப்பு பெட்டிகள் உள்ளன. இதில் அனுபதி வகுப்பு பயணிகளுக்கு உயர்தர சொகுசு உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. அதேபோல் விஸ்டாடோம் பெட்டியில் பயணி 360 டிகிரி அளவில் ரயில் பயணத்தை கண்டு களிக்க முடியும்.
இதையும் படிங்க : West Bengal: பஞ்சாயத்து தேர்தலில் கலவரம்.. 11 பேர் படுகொலை! பாஜக - திரிணாமுல் இடையே கடும் போட்டி!