டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏவுகணைகள் உள்ளிட்ட போர்த் தளவாடங்களைத் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அளித்துவருகிறது. இந்நிலையில், ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான 'ஆகாஷ் பிரைம்' ஏவுகணையைத் தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணை ஓடிசாவில் உள்ள சாந்திபூரிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டது. அந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழித்து, சோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இதை டிஆர்டிஓ உறுதிசெய்துள்ளது.
ஆகாஷின் இந்தப் புதிய பதிப்பு ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டது. இது குறித்துப் பேசிய டிஆர்டிஓவின் தலைவர் சதீஷ் ரெட்டி, "ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பு ராணுவத்திற்கும், விமானப்படைக்கும் கூடுதல் பலத்தை அளிக்கும்" எனத் தெரிவித்தார்.
ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பின் சோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்ததற்காக இந்திய ராணுவம், விமானப்படை, பாதுகாப்புப் பொதுத் துறை நிறுவனம் (DPSU) உள்ளிட்டோருக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.