புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை (ஐஎன்எஸ்) உயர் அலுவலர்கள் சேர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து குறுகிய தொலைவு ஏவுகணையை இன்று (ஆக 23) வெற்றிகரமாக ஏவி சோதித்தனர்.
இந்த ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. ரேடியோ அதிர்வெண் உபகரணம் பொருத்தப்பட்டு இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்க கூடியவை. இந்த வெற்றிகரமான சோதனையை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் தொடர்புடைய குழுவினரை பாராட்டினார். இந்த ஏவுகணை இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும். இதன் மூலம் ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழித்துவிட முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட 8 யூடியூப் சேனல்கள் முடக்கம்