கடந்தாண்டு மே மாதம், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலர் உயிரிழந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு நாட்டினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் நிலவிவந்தது.
படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், நாளை (ஏப்ரல் 9) லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பங்கேற்கும் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பில் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்தும், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 4 வீரர்கள் படுகாயம்!