டெல்லி ஜி.பி. பண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மலையாளத்தில் பேசக் கூடாது என மருத்துவமனை நிர்வாகம் அனைத்துச் செவிலியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
அந்தச் சுற்றறிக்கையில், "மருத்துவமனையில் செவிலியர் மலையாளத்தில் பேசக் கூடாது; இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு செவிலியர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், "மற்ற இந்திய மொழிகளைப் போலவே மலையாளமும் இந்திய மொழி! மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.