சென்னை: குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிற்கு குத்தகையாக வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டீ.டீக்கராமன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, குத்தகை ஒப்பதந்தம் ரத்து செய்யப்பட்டு, நிலம் சுவாதீனமும் எடுக்கப்பட்டுவிட்டதால், உடனடியாக நிவாரணம் கோர முடியாது எனவும் பல தகவல்களை மறைத்து இடைக்கால நிவாரணம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அன்றே நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டபோது எந்த போராட்டமும் இல்லாமல் சுவாதீனம் எடுக்கப்பட்டதாக கூறினர். ரேஸ் கிளப் இடத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டால் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
ரேஸ் க்ளப் நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி ஆஜராகி, குத்தகைக்கான காலம் முடிந்தாலும் முறையாக நோட்டீஸ் அளிக்காமல் காலி செய்ய வலியுறுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி வாதிட்டார்.
ரேஸ் கிளப்-பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மூலம் ஆண்டுக்கு பத்து கோடி ரூபாய் வரி வருவாயாக அரசுக்கு கிடைப்பதாக கூறினார்.
குதிரை உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், கிளப் மூடப்பட்டால் அங்கு பணியாற்றி வரும் குதிரை பயிற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து அவசரமாக விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.