ஹைதராபாத்: யாதாத்ரி புவனகிரி மாவட்டம் லிங்கராஜூபள்ளியைச் சேர்ந்தவர் எருகுல ராமகிருஷ்ணா (32), ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். முதலில் வலிகொண்டாவில் பணிபுரிந்து வந்த அவர் பின்னர் யாதகிரிகுட்டா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்த வந்த பார்கவி என்பவரை காதலித்து வந்தார். ராமகிருஷ்ணா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பார்கவியின் தந்தை பல்லேபட்டி வெங்கடேஷ் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின் நல்கொண்டாவில் தம்பதி வசித்து வந்த நிலையில், பார்கவியை அவரது தந்தை வெங்கடேஷ் வலுக்கட்டாயமாக யாதகிரிகுட்டா மண்டலம் கௌரைப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். கணவரை பிரிந்து வரும் படி மகளை வெங்கடேஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, பார்கவி மீண்டும் கணவரிடம் திரும்பிச் சென்று, புவனகிரியில் 10 மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், பார்கவி, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி டவுன் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கணவர் ராமகிருஷ்ணா, ஜம்மாபூரைச் சேர்ந்த அமிர்தய்யாவுடன் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியில் சென்று வீடு திரும்பவில்லை எனக்கு கூறி புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அமிர்தய்யாவை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. ராமகிருஷ்ணாவைக் கொலை செய்ய பார்கவி தந்தை வெங்கடேஷ் கூலிப்படை ஏவி ரூ.10 லட்சத்துக்கு பேரம் பேசி ரூ.6 லட்சம் கொடுத்தார். அந்த திட்டத்தின்படி, ராமகிருஷ்ணனுடன் எலுமிச்சை தோட்டத்திற்கு சென்ற நிலையில், அங்கு காத்திருந்த கும்பல் ராமகிருஷ்ணாவை தாக்கி கொலை செய்தனர் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, சித்திப்பேட்டை மாவட்டம் பெத்தம்மாதல்லி கோயில் அருகே ராமகிருஷ்ணாவின் உடலை மீட்ட காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக லத்தீப், அவரது மனைவி திவ்யா, அப்சர், மகேஷ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். மகளின் கணவனை கூலிப்படை ஏவி தந்தை ஆணவக்கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டான்- பகீர் கிளப்பிய புகார்