மும்பை : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை 9 ஆயிரத்து 650 கோடி ரூபாய் கொடுத்து இந்துஜா நிறுவனம் விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் உலகின் 6 வது பணக்காரராக வலம் வந்த அனில் அம்பானியின் சொத்துகள் தற்போது ஒவ்வொன்றாக கரைந்து வருகின்றன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிட்டல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் நேவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறந்தவர் அனில் அம்பானி. சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் வியாபாரத்தில் காட்டிய அவசரம் உள்ளிட்ட காரணங்களால் ஏறிய வேகத்தில் அனில் அம்பானி பெரும் நஷ்டங்களை சந்தித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு துறைகளை பற்றி அறியாமல் அதில் கண்மூடித்தனமாக முதலீடுகளை வாரி இரைத்தது, அதற்காக வங்கிகளில் அதிகளவில் கடன் பெற்றது உள்ளிட்ட காரணங்களும் அனில் அம்பானி திவாலாக முக்கியத்தக்க ஒன்று எனக் கூறப்படுகிறது. அளவுக்கு மீறிய கடன் மற்றும் கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அனில் அம்பானியின் நிதி சார்ந்த நிறுவனமான ரிலையன்ஸ் கேபிட்டல் ஜப்தி நிலைக்கு வந்து உள்ளது.
செலுத்த முடியாத கடன் சுமையை அடுத்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் ஏலத்திற்கு வந்து உள்ளது. ஏலத்திற்கு வந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை கைப்பற்ற பெரும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்துஜா குழுமம், டோரெண்ட் இன்ஸ்வெட்மென்ட்ஸ், ஓக்ட்ரீ கேபிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேபிட்டல் ஏலத்தில் கலந்து கொண்டு உள்ளன.
முதல் கட்டமாக நடந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை கைப்பற்ற இந்துஜா நிறுவனம் 9 ஆயிரத்து 510 கோடி ரூபாய்க்கு முன்மொழிந்தது. இந்துஜா குழுமத்தை தொடர்ந்து ஓக்ட்ரீ மற்றும் டோரெண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் ஏலம் கேட்டன. இந்நிலையில் இரண்டாவது கட்ட ஏலம் நடைபெற்றது.
இதில் இந்துஜா குழுமம், 9 ஆயிரத்து 650 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை ஏலம் கேட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஏலப் போட்டியில் ஓக்ட்ரி மற்றும் டோரெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இருக்கும் நிலையில் அவர்கள் தரப்பில் இருந்து ஏலத் தொகை முன்மொழியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை, இந்துஜா குழுமம் கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது. இந்துஜா குழுமம் நிர்ணயித்து உள்ள 9 ஆயிரத்து 650 கோடி ரூபாய் தொகை என்பது, ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்திம் 41 சதவீத கடன் மீட்பு தொகைக்கு சமமானது எனக் கூறப்படுகிறது.
முதற் கட்ட ஏலத்தில் டோரெண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் அறிவித்த தொகையை விட ஆயிரம் கோடி ரூபாய் இந்துஜா குழுமம் கூடுதலாக அறிவித்து உள்ளதால் அந்நிறுவனமே ரிலையன்ஸ் கேபிட்டல்சை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Repo Rate : ஆர்பிஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி! - வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லையா?