சிம்லா : பாஜக போல் காங்கிரஸ் அரசு ஒருபோதும் மக்களை ஏமாற்றாது என்றும் ஒரே கட்டமாக மக்களுக்கு அளிக்கப்பட்ட 10 உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்றும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற அதேநேரத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் கண்ட தோல்வி குறித்து பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, தேர்தல் தோல்விகள், வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்கும் என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் ஓராண்டு பதவிக் காலத்தில் அரசு மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாக கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் நிலவி வரும் பொருளாதார சுணக்கம் குறித்து பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளின் காரணமாக 20 சதவீதம் வரை பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு உள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தில் நிலவும் பொருளாதார சுணக்கத்தை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, அதேநேரம் தேர்தலுக்கு முன்னதாக அளிக்கப்பட்ட உத்தரவாதமான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தி உள்ளதாக கூறினார்.
மேலும், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, சிம்லாவில் உள்ள பாலிகா ஆசிரமத்திற்குச் சென்று ஆதரவற்ற சிறுமிகளைச் சந்தித்ததாகவும் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக பணியாற்ற தனது அரசு முயற்சிக்கித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாநிலத்தின் குழந்தைகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களின் கல்வி மற்றும் பிற வசதிகளுக்கு தேவையான ஏற்பாடு அனைத்தும் செய்யப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்தார்.
அரசின் ஓராண்டு பதவிக் காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு தர்மசாலாவில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த ஓராண்டு பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பொது மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்தார்.
பாஜக போன்று காங்கிரஸ் மக்களை ஒருபோதும் ஏமாற்றாது என்றும் கடந்த அரசாங்கத்தை போல் இல்லாமல் தனது அரசு இளைஞர்களை ஏமாற்றாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சி காலத்தில், வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான மோசடி வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாகவும், தற்போதைய அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்த முயற்சித்து வருவதாகவும் சுக்விந்தர் சிங் சுக்கு கூறினார்.
ஒரே கட்டமாக மக்களுக்கு அளிக்கப்பட்ட 10 உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்றும் அடுத்த ஒராண்டில் அரசு மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாக கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்தார்.
இதையும் படிங்க : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் 18 லட்சம் வீடுகள் விடுவிப்பு - பதவியேற்புக்கு முன்னரே உத்தரவு! யார் இந்த விஷ்ணு தியோ சாய்?