கொச்சி: ஹஜ் யாத்திரைக்காக யாத்ரீகர்களைக் கொண்ட விமானம் நேற்று (ஜூன் 4) கொச்சியிலிருந்து சௌதி அரேபியாவிற்கு கிளம்பியது. சௌதி அரேபியன் ஏர்லைன்ஸை சேர்ந்த இந்த விமானம் 377 பயணிகளைக் கொண்டு ஹஜ்ஜூக்குக் கிளம்பியது.
இந்த விமானத்தை கேரளாவின் வக்பு மற்றும் ஹஜ் யாத்திரை அமைச்சர் அப்துர் ரஹ்மான் கொடி அசைத்து அனுப்பிவைத்தார். அவருடன் கேரள அமைச்சர் அஹமது தேவர் கோவில், மத்திய ஹஜ் கமிட்டி சேர்மன் அப்துல்லாகுட்டி,மாநில ஹஜ் கமிட்டி சேர்மன் முஹமது ஃபைசி ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து மத்திய ஹஜ் கமிட்டி சேர்மன் அப்துல்லா குட்டி கூறுகையில், “ இன்று, இந்திய ஹஜ் யாத்திரை செல்பவர்களின் முதல் வகுப்பினர் கொச்சி விமான நிலையத்திலிருந்து சௌதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். எங்களின் திட்டம் படி, ஹஜ் செல்வதற்கான கடைசி விமானம் வருகிற ஜூலை 3 அன்று மும்பையிலிருந்து கிளம்பும். நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாங்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம், நிச்சயம் வெற்றிகரமாக மெக்காவில் அனைத்து சடங்குகளையும் செய்வோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், கேரளாவின் வக்பு மற்றும் ஹஜ் யாத்திரை அமைச்சர் அப்துரஹ்மான், யாத்ரீகர்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பிரச்சினையின்றி எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மொத்தம் 20 விமானங்கள் ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை கொச்சியிலிருந்து மெடினாவிற்குப் புறப்படுகின்றன.
இந்த விமானக்களில் 7,724 பேர் பயணிக்கவுள்ளனர். அதில் 5758 பேர் கேரளாவைச் சேர்ந்த பக்தர்களாகவும், 1966 பக்தர்கள் தமிழ்நாடு, லட்சத் தீவுகள், மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.