மோர்பி (குஜராத்): குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் நடுவே ஆங்கிலேயர் காலத்து கேபிள் பாலம் உள்ளது. இது சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 26 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (அக் 30) விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாலத்தில் இருந்தனர். அப்போது மாலை 6.30 மணியளவில் பாலம் திடீரென அறுந்து விழுந்தது.
இதில் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கினர். இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் 4 குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து விசாரிக்க சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைச் செயலர் சந்தீப் வாசவா மற்றும் நான்கு மூத்த அரசு அலுவலர்கள் கொண்ட ஐவர் உயர் மட்டக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சங்கவி தெரிவித்துள்ளார். அதேநேரம் விபத்து நேர்ந்த இடத்தில் உள்ள சிலர், விபத்து நிகழ்வதற்கு முன்பு சில இளைஞர்கள் பாலத்தினை அசைத்துக் கொண்டே இருந்தனர் என்றும், இதுகுறித்து உரிய அலுவலர்களிடம் தெரிவித்தும் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், விபத்து நடந்த இடத்திற்கும், விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த சிவில் மருத்துவமனைக்கும் சென்றார். மேலும் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மான் கி பாத்' உரையில் காஞ்சிபுரம் விவசாயியைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி!