காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேசத்திற்குக் கடந்த 12-ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது.
இதனிடையே, பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் இமாச்சலப்பிரதேசத்தில் இழுபறி நீடிக்கலாம் என்றும் முடிவுகள் வந்துள்ளன.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் காவல்துறை, துணை ராணுவத்தினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார் என்பது குறித்த முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால் அரசியல் கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவின் தலையெழுத்து... காங்கிரஸின் கடைசி வாய்ப்பு... வெல்லப்போவது யார்?