காஷ்மீரில் பிரிவினைவாதிகள் சரணடைந்ததைத் தொடர்ந்து, மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு காஷ்மீரில் குடியேறினர். ஆனால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீநகர் பிரஸ் காலனியில், காஷ்மீரின் முன்னாள் பிரிவினைவாதிகளின் மனைவிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறுகையில், "இந்திய குடியுரிமை பெறுவது எங்கள் உரிமை.
அனைத்து நாடுகளைப் போலவே ஆண்களைத் திருமணம்செய்யும் பெண்களுக்கு அந்நாட்டின் குடியுரிமை கிடைத்திட வேண்டும். குடியுரிமை வழங்குங்கள் இல்லையென்றால் எங்களை வேறு நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்.
அதேபோல், நாங்கள் எல்லை கோட்டை தாண்டி குடும்பத்தினரைப் பார்த்திட அனுமதி இல்லை. எனது கணவருடன் இந்தியா வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. சில பெண்கள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இருக்கிறார்கள். எங்களுக்குச் சொந்த அடையாளமில்லை. நாங்கள் வாக்களித்து தேர்தலில் போட்டியிடலாம், ஆனால் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடையாது.
எங்கள் பெற்றோரைப் பார்க்க விரும்புகிறோம், ஏதேனும் தவறு செய்திருந்தால் சிறைகளில் அடைத்து எங்களை நாடு கடத்த வேண்டும். நிர்வாகம் இங்கு அழைத்து வரும்போது, நிறைய விஷயங்களை உறுதியளித்தது, ஆனால் இப்போது எதுவும் செய்யப்படவில்லை" என வேதனையுடன் தெரிவித்தார்.