உத்தரகாண்ட்: கரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக கேதர்நாத் புனித யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு கேதர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மே 6ஆம் தேதி முதல் கேதர்நாத் பயணம் தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக, உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் நெற்றியில் ஆர்எப்ஐடி (RFID) சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் ட்ராக்கிங் சிஸ்டம் கொண்ட இந்த சிப் பயணியின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய உதவுகிறது.
மலையேறும் யாத்ரீகர்கள் இந்த குதிரைகள் மற்றும் கழுதைகளை பயன்படுத்தும்போது, அவர்கள் இருப்பிடத்தை இந்த ஆர்.எப் ஐடி மூலம் எளிதாக கண்டறியலாம். ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 300 குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு ஐடி பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது யாத்ரீகர்களின் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில் - 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை...!