மும்பை : போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து உள்ளது.
மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நடைபெறுவதாகவும் அதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளதாகவும், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
சொகுசு கப்பலில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய போதை தடுப்புப் பிரிவு போலீசார், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுதலை மும்பை சிறப்பு நீதிமன்றம் செய்தது.
இதனிடையே போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவரை கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. மேலும் இந்த வழக்கில் சுயேட்சை சாட்சிகளான கே.பி. கோசாவி மற்றும் சான்வெலி டி சோசா ஆகியோருடன் ஆர்யன் கான் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே, சார்பில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் கே.பி. கோசாவி 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. 25 கோடி ரூபாய் லஞ்சம் தர ஷாருக்கான் தரப்பு மறுப்பு தெரிவித்த நிலையில் இறுதியில் 18 கோடி ரூபாய் என இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் 50 லட்ச ரூபாய் முன்தொகையாக பெறப்பட்டதாகவும், பின்னர் அந்த பணம் திருப்பி வழங்கப்பட்டதாகவும் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சமீர் வான்கடே தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவைத் தவறாக அறிவித்ததாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விஜிலென்ஸ் கிளை தெரிவித்துள்ளது.
மேலும், சமீர் வான்கடே ஆடம்பர கைகடிகாரங்களை வாங்கி விற்பனை செய்திருக்கிறார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில், சமீர் வான்கடே ஊழல் மூலம் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது. அதை அடிப்படையாக கொண்டே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சமீர் வான்கடேவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க : DK Shivakumar Delhi Visit Cancel : டி.கே. சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்து? - எதுக்கு தெரியுமா?