ஹூக்ளி : மேற்கு வங்கத்தில் மீண்டும் அரங்கேறிய வன்முறை கல்வீச்சு சம்பவங்களை அடுத்து ரயில் போக்குவரத்து, பார்சல் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ஹவுரா நகரில் உள்ள காசிபாரா வழியாக, கடந்த வார வியாழக்கிழமை ராம நவமி ஊர்வலம் சென்ற போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், பொதுச் சொத்து தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த கலவர சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர்.
அரசு சொத்துகள் பல சேதம் அடைந்தன. இந்த வன்முறைக்கு பின்னணியில் பா.ஜ.க. உள்ளிட்டோர் இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இதை மறுத்த பா.ஜ.க. இந்த விவகாரம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதையடுத்து ஹவுரா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி ஹூக்ளி பகுதியில் பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், தலைமையில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த பேரணியின் போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த பா.ஜ.க எம்.எல்.ஏ பிமன் கோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று (ஏப்.3) இரவு மீண்டும் கலவரம் வெடித்தது. ரிசாரா பகுதியில் திடீரென கலவரம் மூண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹிசாரா ரயில் நிலைய பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசியும், கற்களை வீசியும் போராடக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புறநகர் ரயில் சேவை, பார்சல் சேவை மற்றும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன. மேலும் கலவரத்தை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஹவுரா - புர்த்வான், தர்கேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தபப்ட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டன. ரயில் நிலையம் முன் நின்ற போலீஸ் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். தொடர் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளன.
முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கலவரத்தில் ஈடுபடும் நோக்கத்தில் சுற்றித் திரிபவர்களை முன்கூட்டியே அறிந்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கலவரம் குறித்து அறிந்த மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் தனது டார்ஜிலிங் பயணத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் திரும்பினார்.
இதையும் படிங்க : இந்தியாவின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா - எல்லைப் பிரச்சினையில் மீண்டும் சீண்டுகிறதா?