இந்தியா- பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே கையெழுத்தான ரபேல் போர் விமான ஒப்பந்தப்படி 2016ஆம் ஆண்டில் இந்திய அரசு 36 ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கியது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டதாக 2019ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை கிளம்பியது.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டசால்ட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதை மாற்றி 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.
மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட நிலையில், மோடி அரசு எச்.ஏ.எல். நிறுவனத்தை நீக்கி பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மாற்றிக்கொண்டது.
விவகாரத்தைக் கையிலெடுத்த ராகுல் காந்தி
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ரூ.59,000 கோடி மதிப்பீட்டில் மோடி தலைமையிலான அரசு, பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபின் பிரான்ஸை சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் இடைத்தரகர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கியதாக பிரான்ஸ் ஊழல் தடுப்பு நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகரமாக வெடித்த நிலையில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை ஊழல்வாதி என்று கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்ற பிரான்ஸ் அரசு, விவகாரத்தை கிடப்பில் போட்டது. தேர்தலில் பெரும் வெற்றிபெற்று மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக ரபேல் ஒப்பந்தம் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
இந்தப் பின்னணியில்தான், பிரான்ஸ் நாட்டின் தேசிய நிதி விசாரணை அமைப்பு இந்த ஊழல் புகார் தொடர்பாக நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக கிடப்பிலிருந்த ரபேல் விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஒன்பதரை வருட சிறைவாசம் - விடுதலை ஆனார் முன்னாள் ஹரியானா முதலமைச்சர்