ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் 'பிர்சா' என்னும் பழங்குடியினப் போராளியின் பங்களிப்பு மிக அதிகம். 19ஆம் நூற்றாண்டில் பிகார், ஜார்க்கண்ட் ஆகியப் பகுதிகளில் ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்ட இயக்கங்கள் உருவாக முன்னோடியாகத் திகழ்ந்தவர் பிர்சா முண்டா.
ஆங்கிலேயர்கள் முண்டா என்னும் பழங்குடியின மக்களின் நிலத்தை கையகப்படுத்தி, அவர்களை அடிமைகளாக வறுமை நிலையில் வைத்திருந்தபோது, 'நிலம் எங்கள் உரிமை' என்ற முழக்கத்தோடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிர்சா போராட்டத்தில் இறங்கினார்.
பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்தார். பழங்குடியின மக்கள் தாங்கள் யார் என்பதை அறிய வேண்டும், அவர்கள் தங்கள் கலாசாரத்தின் வேர்களை மறந்துவிடக் கூடாது என்பது பிர்சாவின் விருப்பம்.
கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய பிர்சா முண்டா
பழங்குடியின மக்களைச் சீரமைக்க விரும்பிய பிர்சா, கல்வியின் அவசியத்தைப் பற்றி அம்மக்களிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். வைஷ்ணவத் துறவி ஒருவரிடம் இந்து மத போதனைகளை கற்றுத் தேர்ந்தார். மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை வாசித்து அறிந்தார். பூணூல் அணிந்தார். துளசிச் செடியை வணங்கினார். மாமிசம் உண்ணுவதை கைவிட்டார்.
பழங்குடியின மக்களை கடவுள் வழிபாட்டில் ஈடுபடச் சொன்னார். பிரார்த்தனை செய்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மது பழக்கத்தை கைவிடச் சொன்னார். 'பிர்செய்த்' என்ற தனி கோட்பாடை வகுத்துக் கொண்டார். பழங்குடியின மக்கள் இந்தக் கோட்பாடை பின்பற்றத் தொடங்கினார்கள். இது பழங்குடியின மக்களை மதமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
'உலுகன்' என்ற இயக்கத்தைத் தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். அவரது போராட்டத்தின் பயனாக, 1908ஆம் ஆண்டு 'சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம்' கொண்டுவரப்பட்டது. பழங்குடியின மக்களின் நிலத்தை பழங்குடி அல்லாதவர்கள் பறிப்பதற்கு அச்சட்டம் தடைவிதித்தது.
பிர்சா முண்டா சில சுவாரஸ்யங்கள்
- பிர்சா முண்டா வியாழக்கிழமையன்று பிறந்தார். முண்டா பழங்குடியின வழக்கப்படி, அந்த நாளில் பிறந்தவர்களுக்கு சூட்டப்படும் பெயரையே அவருக்கும் சூட்டினர்.
- பிர்சாவின் புகழைப் பறைசாற்றும் பல நாட்டுப்புறப் பாடல்கள் பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
- நண்பர்களுடன் மணலிலும் புழுதியிலும் விளையாடுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
- புல்லாங்குழல் வாசிப்பில் பிர்சா கைதேர்ந்தவர். பூசணியால் செய்யப்பட்ட இசைக்கருவி ஒன்றை அவர் எப்போதும் சுமந்திருப்பார்.
- படிப்பில் ஆர்வம் மிகுந்த அவர், ஜெர்மன் பள்ளியில் பயில்வதற்காக கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அப்போது மதம் மாறினால்தான் படிக்க முடியும் என்ற சூழல் இருந்தது. 'பிர்சா டேவிட்' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். பின்னாளில் 'பிர்சா தாவுத்' என பெயர் மாற்றம் செய்துகொண்டார்.
- ஜெர்மன், ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் பிர்சா பயின்ற பள்ளியில் அதிகம். அதனால் பிர்சாவின் தந்த சுகனா முண்டா, தன் மகனின் படிப்புக்குத் தடைபோட்டார்.
- 1988ஆம் ஆண்டு பிர்சா முண்டாவை கவுரவிக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தால் அவர் பெயரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- பழங்குடியின மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாகவும் கடவுளாகவும் பாவித்தனர்.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அவர் பிறந்த நாளை (நவம்பர் 15) பெரிதாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் ஜார்க்கண்ட் தலைநகரில் உள்ள அவரது சமாதியிலும் விழாக்கோலமாக இருக்கும்.
- பிர்சா முண்டா விமான நிலையம், சிதோ கன்ஹோ பிர்சா பல்கலைக்கழகம், பிர்சா விவசாயப் பல்கலைக்கழகம் என பல்வேறு அரசு உடைமைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
- நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களில் பிர்சாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அந்தத் தலைவர்களில் இவர் மட்டும்தான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
சிறையில் சிதைந்த சிங்கம்
கொரில்லா முறைத் தாக்குதலின் மூலம் பிர்சாவும், அவரது போராட்டக் குழுவினரும் ஆங்கிலேயர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். ஆனால், அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவர் ஆங்கிலேயர்களிடம் சிக்கினார். சக்ரதார்பூரில் உள்ள ஜம்கோபாய் வனப்பகுதியில் வைத்து அவரை ஆங்கிலேயர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
1900, ஜுன் 9ஆம் தேதி அவர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிறையில் இறந்துவிட்டதாக ஆங்கிலேய அரசாங்கம் அறிவித்தது.
கோலிவுட்டிலும் பிர்சாவின் குரல்
பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை பா.ரஞ்சித், கோபி நயினார் ஆகியோர் திரைப்படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், பிர்சா இறக்கும்போது அவரது வயது 25 மட்டுமே.
'நாங்கள் கனவு காணுவதற்கு நீ தடையாக இருந்தால், நாங்கள் உன்னை தூங்க அனுமதிக்கமாட்டோம்' என ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு.
இந்தியர்களை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்களின் தூக்கத்தைக் கலைத்தவர், பிர்சா முண்டா. அவர் புகழ் ஓங்கட்டும், அடுத்த தலைமுறை பிர்சா போன்றவர்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்கு ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டக் குணத்தை வளர்க்கும்.
இதையும் படிங்க: இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திரா பாண்டே நியமனம்!