புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரைச் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு வண்ண விளக்கு கடற்கரைச் சாலை இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைச் சாலையில் காலையிலிருந்தே மக்கள் வரத் தொடங்கினர்.
இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் கடலில் பொதுமக்கள் இறங்கக் கூடாது என்பதற்காக ஒன்றரை கி.மீ. தூரம் வரை தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் யாரும் இறங்கி விடக்கூடாது என்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டாலும், காலை முதல் ஏராளமான உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடலில் இறங்கி குளித்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச.31) மாலை 3.30 மணியளவில் பழைய துறைமுகம் அருகே அரசு உணவு விடுதியான சீகல்ஸ் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். நெல்லித்தோப்பு டி.ஆர்.நகர் சீனிவாசன்-மீனாட்சி ஆகியோரின் மகள்கள் மோகனா (16) 12ஆம் வகுப்பு, லேக்கா (14) 10ஆம் வகுப்பு ஆகியோரும் அருகே குளித்துக் கொண்டிருந்த கதிர்காமம் நவீன் 12ஆம் வகுப்பு, சமையல் வேலை செய்து வரும் கிஷோர் ஆகிய 4 பேரைத் தேடும் பணியில் ஒதியன்சாலை போலீசாரும், உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
விடுமுறை நாட்களிலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களில் உள்ளூர் மீனவர்களைக் கொண்டு கடற்கரை பாதுகாப்புப் படையினர் இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இது போன்ற கொண்டாட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடாததால் அடிக்கடி கடலில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது எனவும், புதுச்சேரி அரசு கடற்கரை பாதுகாப்புப் படை மீண்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் பிரபல ஸ்வீட் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு; தீவிர விசாரணையில் போலீசார்!