புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலக வாயிலில் இன்று (டிச.27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “நேற்று (டிச.26) இரவு ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருக்கனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தரப்பில் கலந்து கொண்டோம்.
அப்போது என்னையும், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோரை கொலை செய்யும் நோக்கில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூன்று மர்ம நபர்கள் எங்களை நெருங்க முயன்றனர். அவர்களை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆகையால், இந்த ஆட்சியாளர்கள் எதிர்கட்சியினரைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். உயிர் எங்களுக்குப் பெரிதல்ல. மக்கள் நலனுக்காக எந்த நிலைக்குச் செல்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் அந்த தொகுதி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி. அவர் ஆட்களை வைத்து எங்களைக் கொலை செய்ய முயல்கிறாரா? இந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "மத்தியில் மோடி, மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசும் எதிர்கட்சிகள் குரல்வளையை நசுக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியே அனுப்புகிறார். அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் மோடி மாடல் வந்துவிட்டது. மோடி எப்படி எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறாரோ, அதே போன்று புதுச்சேரியில் மக்களுக்காகப் போராடும் எங்களையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி, மக்கள் பிரச்சினையைப் பேசாமல் இருக்க வேண்டுமெனப் பார்க்கிறார்கள்.
இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் நாராயணசாமி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்கு கடன் கொடுத்ததாகச் சொல்வது வெட்கக்கேடானது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!