ஷகிப்கஞ்ச் (ஜார்கண்ட்): உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா வழியாக அசாம் மாநிலம் திப்ருகரை 51 நாட்களில் சென்றடையும் எம்.வி. கங்கா விலாஸ் சொகுசு சுற்றுலா கப்பலை ஜனவரி 13ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
27 நதிகள் வழியாக, 5 மாநிலங்களைக் கடந்து, 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் சொகுசுக் கப்பல், காசிரங்கா தேசியப் பூங்கா உள்பட பல்வேறு உலக நினைவுச் சின்னங்களை கடந்து செல்கிறது. 36 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில், 18 சூட் ரூம்கள் உள்பட மூக்கில் விரல் வைக்கக் கூடிய வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 54 நாட்கள் கப்பலில் பயணிப்பவர்களுக்கு 40 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 32 சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலா பயணிகளுடன் எம்.வி. கங்கா விலாஸ் கப்பல் கடந்த 16ஆம் தேதி பீகார் மாநிலத்தை சென்றடைந்தது. கங்கை நதியில் போதிய அளவில் நீர் இல்லாததால் தரை தட்டும் நிலை ஏற்பட்டதால் கரைக்கு பல அடி தூரத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்டு சிறிய ரக மோட்டர் கப்பலில் பயணித்து பீகார் சாப்ரா நகரை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்தனர்.
பீகாரில் இருந்து சுற்றுலா பயணிகளுடம் புறப்பட்ட கங்கா விலாஸ் கப்பல், அடுத்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றடைய திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கங்கை நதியில் நீர் குறைவு காரணமாக திட்டமிடப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஜார்கண்ட் மாநிலத்தை கங்கா விலாஸ் கப்பல் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கையில் நீர் குறைவு காரணத்தால் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு கப்பல் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், ஏறத்தாழ 2 நாட்கள் கப்பலை விட்டு வெளியேற முடியாமல் சுற்றுலா பயணிகள் முடங்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஷகீப்கஞ்ச் நகரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து மேள தாளங்களுடன் உள்ளூர் மக்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் கிராம மக்களுடன் உரையாடிய சுற்றுலா பயணிகள், அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பல்வேரு புராதாண சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பீகாரின் மற்றொரு சுற்றுலா நகருக்கு பயணிகளுடன் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் புறப்பட்டது.
இதையும் படிங்க: தன்னைத் தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. காரணம் இதுதான்.!