டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் நேற்று துவங்கியது. இரண்டாம் நாளான இன்று 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை(Budget 2023) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட்டானது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட்டாகும். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு நேர பட்ஜெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ராஜஸ்தான், திரிபுரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கனா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நடுத்தர மக்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை ஈடுகட்டும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
வரி செலுத்தும் சம்பளதாரர்களை பொறுத்தவரையில் இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கில் தொகை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி(RBI) ரொப்போ வட்டி விகிதத்தை பலமுறை உயர்த்தியதால் வீட்டுக்கடன் தொடர்பாக சலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் இடையே உள்ளது.பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவி ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வேலைவாய்ப்புகள், சிறு,குறு நிறுவனங்களுக்கான சலுகை அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாட்டிலேயே மிகவும் அசுத்தமானது கூவம் ஆறு: மத்திய அரசு அறிக்கை!