ஜலபைகுரி : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் மேற்கு வங்கத்தில் 5 கிராமங்கள் வரைபடத்தில் இருந்து காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் வரைபடத்தில் இருந்தே மறைந்து போனது போல் காட்சி சித்தரிக்கப்பட்டு இருக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் 5 கிராமங்கள் ஏறத்தாழ அதேபோன்றதொரு சூழலை சந்தித்து வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, ஆதார் என அனைத்து ஆவணங்களும் இருந்தும் சொந்தமாக கால் சென்ட் இடம் கூட இல்லாமல் ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள் நிர்கதியாக நிற்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் மூலம் தங்களுக்கான தலைமையை தேர்வு செய்யும் வாக்குரிமையை இந்த மக்கள் பெற்ற போதும் நிலையான இருப்பிடம் இல்லாமல் காட்டு விலங்குகளை போல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா - வங்காள தேச எல்லை அருகே உள்ள இந்த ஐந்து கிராம மக்கள் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளை பெற்று இருந்தாலும் சொந்தமாக நிலம் வாங்கவோ அல்லது விற்கவோ அதிகாரமற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா - வங்காள தேச எல்லையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கஜல்திகி, சிலஹாதி, பரஷாஷி, நவ்தரிடேபோட்டர் மற்றும் பதானி ஆகிய கிராமங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சொத்து பரிமாற்றச் சட்டத்தில் தெற்கு பெருபரி கிராம பஞ்சாயத்தின் கீழ் இந்திய பிராந்தியத்தின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்ட போதும் இந்திய வரைபடத்தில் 5 கிராமங்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பின்னர் தெற்கு பெருபரி பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடிய நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையை கணக்கிடும் Radcliffe Line, என இந்த பகுதி கணக்கிடப்பட்டு கிழக்கு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இதற்கு பெருபரி மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 1958 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் பெரோஷ் கான் நூன் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையை தொடந்து அதே ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரு - நூன் என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் தெற்கு பெரிபரி இந்தியா - பாகிஸ்தான் இடையே சரிசமமாக பிரிக்கப்படும் என்றும் அதற்கேற்றார் வகையில் எல்லை வகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்திற்கு தெற்கு பெரிபரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்த்தின் 9வது பிரிவில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்து நிகழ்ந்த 1962 ஆம் ஆண்டு இந்தியா - சீனா போர், 1964 ஆம் ஆண்டு நேருவின் மறைவு, மற்றும் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட பல்வேறு நிகழ்வுகளால் இந்த திருத்தம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியா - வங்கதேசம் இடையிலான எல்லை பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான நில எல்லை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து 17 ஆயிரத்து 160 புள்ளி 63 ஏக்கர் நிலத்தை வங்காள தேசத்திற்கு மாற்றப்பட்டது. அதேபோல் வங்காளதேசத்தில் இருந்து 7 ஆயிரத்து 110 புள்ளி 2 ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அங்கு ஏற்கனவே வசித்து வரும் மக்கள் தங்கள் விருப்பம் போல் இந்தியா அல்லது வங்காளதேச குடியுரிமை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அந்த 5 கிராம மக்கள் தங்களது குடியுரிமையை தேர்ந்தெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச எல்லை நிர்ணயத்தின் படி அந்த ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்தியாவுக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் வசிக்கும் நிலப் பகுதி இந்திய வரைபடத்தில் இணைக்கப்படாததால், சாதாரண மக்களை போல் அந்த கிராம மக்கள் அரசின் நிலப் பலஞ்களை பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : திருமண விழாக்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப காப்புரிமை பிரச்சினையா? மத்திய அரசின் சூப்பர் விளக்கம்!