டெல்லி: டெல்லி மற்றும் அதன் அருகாமை மாநிலங்களில் நடைபெறும் விவசாய போராட்டம் 116ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், மூன்று பண்ணை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் மார்ச் 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும் என சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மார்ச் 28 ம் தேதி ‘ஹோலிகா தஹான்’ நிகழ்ச்சியின் போது புதிய பண்ணை சட்டங்களின் நகல்கள் எரிக்கப்படும் என்றும் விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் 90ஆவது தியாக தினம் மார்ச் 23 ஆம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் பெரிய அளவில் அனுசரிக்கப்படும் என்றும் உழவர் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்துக்கு 40 விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) தலைமை வகிக்கிறது.
இது குறித்து தேசிய விவசாயிகள் சம்மேளன செய்தித் தொடர்பாளரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவருமான அபிமன்யு கோஹர் ஈடிவி பாரத்துடன் பேசுகையில், "இந்த முறையும் பாரத் பந்தின் தாக்கம் டெல்லியில் காணப்படும். இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவளிக்கும். போராட்டத்தின்போது எந்தவொரு விவசாயத் தலைவர்களும் டெல்லிக்குச் செல்லமாட்டார்கள்.
டெல்லி எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகளும் டெல்லிக்குள் நுழைய எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். முறையான வழியில் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை அரசாங்கம் அனுப்பினால், நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்" என்றார்.