டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவுமான ஜவஹர்லால் நேரு 1937ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (Associated Journals Limited) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிறுவனத்தின் மூலம் முக்கிய தலைவர்களால் எழுதப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையும், உருது மொழியில் குவாமி ஆவாஸ் என்ற பத்திரிகையும், இந்தி மொழியில் நவ்ஜீவன் என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது.
இந்த பத்திரிக்கைகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளும், விமர்சனங்களும் இடம்பெற்றதால், கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1942ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் பத்திரிக்கையை தடை செய்தது. இதனால் பொருளாதார பாதுகாப்பு கருதி இந்த நிறுவனம் நாட்டின் பல நகரங்களில் நிலங்களை வாங்கியது. இதையடுத்து 1945ஆம் ஆண்டு நிறுவனம் மீண்டும் செயல்படத்தொடங்கியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். இதன் காரணமாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால், அதே ஆண்டில் பத்திரிகை நிறுத்தப்பட்டது.
அப்போது 1,057 பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. ரூ. 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்நிறுவனத்தில் தலா 38 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கின்றனர்.
மீதமுள்ள 24% பங்குகள் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே உள்ளிட்டோர் கொண்டிருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.90 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி 2012ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, சுப்பிரமணிய சுவாமி தரப்பில், 2011ஆம் ஆண்டு வெறும் ரூ.50 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட "யங் இந்தியா பிரைவேட் லிமிடெட்" என்ற "போலி நிறுவனம்" மூலம் ரூ.90 கோடி கடன் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 10 ரூபாய் மதிப்பிலான 9 கோடி பங்குகளை யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெறுகிறது. இதன்மூலம் கொடுத்த கடனுக்கான பங்குகளை பெற்றுவிட்டது. ஆனால், டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் கட்டடம் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது பண மோசடியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பு விளக்கம்
இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பில், "அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர், வெளியீட்டாளர் என்று அனைத்து பொறுப்புகளிலும், வரவு செலவுகளிலும் எவ்வித தலையீடும் நாங்கள் செய்யவில்லை. அதேபோல இந்த நிறுவனத்தின் சொத்துக்களிலும் எவ்வித பரிமாற்றமோ, பெயர் மாற்றமோ செய்யப்படவில்லை. இந்த வழக்கு அதன் பங்குதாரர்களான சுதந்திர போராட்ட வீரர்களை அவமரியாதை செய்யும்படி உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
பாஜக 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை எடுத்து நடத்துகிறது. அதே ஆண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக சம்மன் அனுப்பட்டது. இருவர் மீதும் பணமோசடி வழக்கு பதியப்பட்டது. 2015ஆம் ஆண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை மீண்டும் மந்தமான நிலையில், ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதிலிருந்து சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஆனால், சோனியாகாந்தி கரோனா காரணமாக, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டார். இதனால் ஜூன் 23ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல ராகுல்காந்திக்கு ஜூன் 8ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர் வெளிநாட்டிலிருப்பதாகக் கூறி விலக்கு கேட்டார். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்தது. அதன்படி நேற்று ராகுல்காந்தி ஆஜரானார். இன்றும் விசாரணை தொடர்கிறது.
இதையும் படிங்க: இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி