ஜார்க்கண்டில் உள்ள கர்வா மாவட்டத்தின் பலமு பகுதியில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிறுத்தை ஒன்று நான்கு குழந்தைகளைக் கொன்றது. மனிதனை உண்ணும் இந்த சிறுத்தையை கண்காணித்து பிடிக்க ஹைதராபாத்தில் இருந்து பிரபல வேட்டைக்காரரை ஜார்க்கண்ட் வனத்துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர். இந்த கண்காணிப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட ட்ராப் கேமராக்கள், ஒரு ட்ரோன் மற்றும் பல வனத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராம்கந்தா, ரங்கா மற்றும் பண்டாரியா ஆகிய மூன்று முக்கிய எல்லைகளில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் மனிதனை உண்ணும் இந்த சிறுத்தையால் பீதியடைந்துள்ளனர். நான்கு குழந்தைகளின் இறப்பைத் தொடர்ந்து, சூரிய மறைவிற்குப் பின்னர் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து ராம்கந்தாவில் உள்ள விவசாயி ரவீந்திர பிரசாத் கூறுகையில், ‘ சிறுத்தை பயத்தால் எங்களால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மாலையில் ஊரடங்கு உத்தரவு போல் வெறிச்சோடி உள்ளது' எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில தலைமை வனவிலங்கு வார்டன் சசிகர் சமந்தா கூறுகையில், ‘சிறுத்தையை பிடிப்பதற்காக நவாப் ஷபத் அலி கானை நியமிக்க அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது. சிறுத்தையை உயிருடன் பிடிப்பதே எங்களின் நோக்கமாகும். நவாப் ஷபாத் அலி கானை சந்தித்து கலந்து ஆலோசித்தோம்’ எனக் கூறினார்.
இந்நிலையில் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடியவில்லை என்றால் கொன்று பிடிக்கப்போவதாகவும் சசிகர் சமந்தா தெரிவித்தார். மேலும் நவாப்பை இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளதாக நவாப் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 28அன்று 12 வயது சிறுவன் ஒருவன் மிருகத்தால் கொல்லப்பட்டதையடுத்து குஷ்வாஹா கிராமத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட ட்ராப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் பொருத்தப்பட்ட ட்ராப் கேமராக்கள் பல்வேறு விலங்குகளைப் படம்பிடித்துள்ளன. இருப்பினும் சிறுத்தை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புலி வருது..! புரளியால் பெரம்பலூர் மக்கள் பீதி; வனத்துறை விளக்கம்!