சாமராஜ்நகர்: தசரா நாயகனாக இருந்த விநாயகம் என்ற அக்கி ராஜா யானை நேற்று (அக்.31) மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய உருவம், உருவத்திற்கு ஏற்ற குணம் என்று, வனப்பகுதியில் அட்டகாசம் செய்து திரிந்த விநாயகத்தைக் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி அன்று குண்டகெரே சரகத்திலிருந்து ராமாபூர் யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அடியாத மாடு பணியாது என்பதைப் போல ஆக்ரோஷம் நிறைந்த விநாயகம் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்த நிலையில், அதன் குணத்தை மாற்றாவதற்காக முகாமில் தனித்து விடப்பட்டு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. பின்னர் பாகனின் வழிக்கு வந்த விநாயகம், முகாமில் மற்ற யானைகளுடன் பழக்கத்திற்காக விடப்பட்டது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் இயல்பை மாற்றி மற்ற யானைகளுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் அனைவரின் அன்பு யானையாக இருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற தசரா விழாவில், தனது பிரம்மாண்டமான உடல் அமைப்பினால் விழா நாயகனாக ஊர்வலம் வந்து அனைவரின் பார்வையை தன் மீது திருப்பியது. ஆனால் யாரும் சற்று நினைத்துக்கூடப் பார்க்காத வகையில் விநாயகம் நேற்று(அக்.31) மயங்கி விழுந்தது. முதலுதவிகள் அளிக்கப்பட்டும், மருத்துவப்பலனின்றி விநாயகம் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று (நவ.1) அக்கி ராஜா யானையின் உடலை மருத்துவர்களான வாசிம் மிர்சா மற்றும் முஜீப் ஆகியோர் உடற்கூராய்வு செய்தனர். உடற்கூராய்விற்குப் பின்னர், யானை தீவிர மாரடைப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் உடற்கூராய்வின் போது யானையின் இருதயத்தைச் சோதித்த போது, அதன் இருதயம் மூன்று மடங்கு வீக்கத்தில் இருந்ததாகுவும் தெரிவித்தனர். தொடர்ந்து விநாயகத்தின் சில உடற்பகுதிகள் மைசூருவுக்குப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடற்கூராய்விற்கு பின்னர் விநாயகத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு கோயம்புத்தூரில் சுற்றித்திரிந்து, விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வந்த அக்கி ராஜா வனத்துறையிடம் சிக்கி முதுமலை காட்டுப்பகுதியில் விடப்பட்டது. அந்த வழிப்பாதையில் குண்ட்லுப்பேட்டை தாலுகா எலசெட்டி கிராமத்திற்குள் நுழைந்து தன் அட்ராஷிட்டியைத் தொடர்ந்தது. கடந்த ஜூன் மாதம் எலசெட்டி கிராமத்திலிருந்து ராமாபூர் யானைகள் முகாமிற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று முற்றிலும் அடங்கிப் போனது அக்கி ராஜா யானை.
இதையும் படிங்க: வால்பாறை அருகே குடியிருப்பை துவம்சம் செய்த யானைக் கூட்டம்.. அச்சத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்!