புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 01.01.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு புதுச்சேரியில் உள்ள மாஹே மற்றும் ஏனாம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 25 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யும் பணி கடந்த 2023 அக்.27ஆம் தேதி முதல் டிச.9ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மேற்குறிய மாற்றங்கள் உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான வல்லவன் கலந்து கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.
தற்போது வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 54 ஆயிரத்து 700 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 179 பேரும், ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 2 ஆயிரத்து 397 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 124 பேரும் அடங்குவர்.
எப்போதும் போல, இந்த முறையும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதாகவும், இந்த முறை 30 ஆயிரத்து 199 புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில் அல்லது வாக்காளர் வசதி மையங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!