டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மீது அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று, திங்கள்கிழமை (ஜூலை 03ஆம் தேதி) காலை பறந்ததாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து, டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
திங்கட்கிழமை காலை 5.30 மணியளவில், பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) அதிகாரிகள், பிரதமரின் இல்லத்தின் மீது அடையாளம் தெரியாத சில பொருள்கள் சுற்றியதைப் பார்த்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து, விரைவாக செயல்பட்டு, மர்மமான ட்ரோனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விரிவான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது, காவல் துறை. ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அருகிலுள்ள எந்த ட்ரோன்களும் கண்டறியப்படவில்லை.
பிரதமர் இல்லம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் பறந்ததாக தகவல் கிடைத்தது. அருகில் உள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், அதுபோன்ற எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை (ATC) உடன் இணைந்து தேடியும் , அப்படி, எந்தவொரு பொருளும் தென்படவில்லை . இதுதொடர்பான முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரிய வரும் என்று டெல்லி காவல்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம், தடைசெய்யப்பட்ட வான்வெளி எல்லைக்குள் வருகிறது, குறிப்பாக பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதி அல்லது ஆளில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதி என்ற பிரிவிற்குள் அது வகைப்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய மற்றும் உயர்தர தனிநபர்கள் மற்றும் முக்கியமான அரசாங்க நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தடைசெய்யப்பட்ட மண்டலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரோன்கள் பயன்பாடு, சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அவைகளின் பங்களிப்புகள் தற்போது,பொழுதுபோக்கு நோக்கங்கள் முதல் வணிக மற்றும் இராணுவ பயன்பாடுகள் வரை நீண்டு கொண்டே போகின்றன. உச்சகட்ட பாதுகாப்புகள் நிறைந்த பிரதமரின் வீடு அமைந்து உள்ள பகுதியில், ஆளில்லா விமானம் பறந்து உள்ள சம்பவம், அங்கீகரிக்கப்படாத ட்ரோன்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து கவலைகளை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: மளிகைப் பொருட்கள் விலை உயர்வு - காரணம் இதுதானாம்!