டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
பாஜக எம்.பி.யை கண்டித்து அமளி: தீர்மானம் குறித்து உரையாற்றிய ராஜஸ்தான் மாநிலம் சித்தோர் கார் தொகுதி பாஜக எம்.பி. ஜோஷி, "அலாவுதீன் கில்ஜி படையெடுத்து வந்த போது, மேவார் ராணி பத்மாவதி, தனது கண்ணியத்தை காப்பதற்காக உடன்கட்டை (சதி) ஏறினார். இதற்கு ஆதாரங்கள் இல்லையென்றாலும், தனது கண்ணியத்தை காப்பதற்காக பத்மாவதி தீக்குளித்துள்ளார்'' என்றார்.
வழக்கொழிந்த உடன்கட்டையை பாஜக எம்.பி. ஜோஷி, புகழ்ந்து பேசுவதாக கூறி திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 1.30 மணி வரை ஒத்திவைத்தார்.
உடன்கட்டை ஏறுவது பெருமையா?: மீண்டும் அவை கூடியதும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான தீர்மானம் குறித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல். பாஜக எம்.பி. ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வேதனை அடைய செய்துள்ளது'' என்றார்.
சர்வாதிகார போக்கு: தொடர்ந்து பேசிய கனிமொழி, "குடியரசுத் தலைவர் தனது உரையில் நாடு இனி கொள்கை முடக்கத்தால் பாதிக்கப்படாது எனக் கூறினார். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒற்றையாட்சி கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே வரி, ஒரே மொழி, ஒரே கட்சி என்ற அம்சத்தை நோக்கி நகர்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதில், மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. சர்வாதிகாரப் போக்குடன் தான் மத்திய அரசு செயல்படுகிறது" என கூறினார்.
தமிழ்நாடு ஆளுநர் மீது புகார்: "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். பாஜக தலைமை இல்லாத ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநில ஆளுநர்களுடன் போராட வேண்டியுள்ளது. மாநில அரசுடன் இணக்கமாக செயல்படுவது குறித்து ஆளுநர்களுக்கு மத்திய அரசு கற்றுக் கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் எதிர்க்கட்சியினரின் குரல் நசுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் ஏதும் இல்லாததால், குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை" என கனிமொழி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 'அதானி' பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - ராகுல் காந்தி