டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசு குறிபிட்ட பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கம். பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பிற்கு ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மத்திய அரசு தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டது.
யாருக்கெல்லாம் போனஸ்? அதில், 2022-2023ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்காலிக போனஸ் கணக்கிடுவதற்கான உச்ச வரம்பை ரூ.7,000 ஆக நிதி அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 மார்ச் 31ஆம் தேதி முதல் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், 2022-2023ஆம் ஆண்டில் குறைந்தபட்சமாக 6 மாதங்கள் தொடர்ந்து வேலை செய்த ஊழியர்களுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உள்பட குரூப் சி மற்றும் கெசட் அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எவ்வளவு வரை போனஸ் கிடைக்கும்? துணை ராணுவப் படைகளில் பணியாற்றுபவர்க்கு தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சி பிரிவு மற்றும் அரசிதழில் பதிவு பெறாத பி பிரிவு பணியாளர்களுக்கு 30 நாட்களுக்கு இணையான ஊதியத்தை அதிகபட்சமாக ரூ.7,000 வரை தீபாவளி போனஸாக மத்திய அரசு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், எந்த பிரிவு ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தீபாவளி போனஸ் அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் அஜய்; இஸ்ரேலில் இருந்து 5வது விமானம் மூலம் 286 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்தனர்!