ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மீது ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆட்டோ ஓட்டுநர் திட்டமிட்டு வந்தே இடித்துவிட்டு சென்றது உறுதியானது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதல்கட்டமாக விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங் உதவியாளர் ரன்ஜய் சிங் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமின் கொடுக்க அண்மையில் நீதிபதி உத்தம் ஆனந்த் மறுத்துவிட்டார்.
சிறையில் உள்ள இருவரும் தாதா அமந்த்சிங் கும்பலை சேர்ந்தவர்கள். எனவே நீதிபதி மரணத்தில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு சிவசேனா பாராட்டு!