டெல்லி: கடந்த வெள்ளிகிழமை ஏர் இந்திய விமானம் டெல்லியில் இருந்து நேபாளம் தலைநகர் காத்மண்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது, அதே வழியில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் காத்மண்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடியில் பறந்து கொண்டு இருந்த் நிலையில், நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டு இருந்தது. திடீரென ஏர் இந்தியா விமானம் தாழ்வாக பறக்கத் தொடங்கியது. நேபாள் ஏர்லைன்ஸ் மட்டும் ஏர் இந்தியா விமானம் மிகவும் குறுகிய உயர இடைவெளியில் பறந்து கொண்டு இருந்தன.
இதனால், ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிக் கொள்லும் சூழல் உருவானது. இரு விமானங்களும் மிகவும் குறுகிய இடைவேளியில் பறப்பதை அறிந்த காத்மண்டு விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தை உடனடியாக உயரத்தை குறைக்கும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆயிரம் அடியில் இருந்து 7 ஆயிரம் அடி உயரத்திற்கு குறைந்து பறந்தது. விமான கட்டுபாட்டு அறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் விமான கட்டுப்பாட்டு அறையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கடிதம் எழுதியது.
இந்திய விமானிகள் மீது நேபாள விமான போக்குவரத்து ஆணையரகத்துக்கு அதிகாரம் கிடையாது என்பதால் நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் மூலம் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களை அளிக்குமாறு நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு, டிஜிசிஏ கடிதம் எழுதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா தரப்பில் டிஜிசிஏ- விடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேபாள விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தரும் தரவுகளை கொண்டு டிஜிசிஏ நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்படு உள்ளது. இரு விமானங்கள் நடுவானில் மோத இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெருக்கும் நிதி நெருக்கடி - உணவு பொருட்களை வாங்க போராட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!