ரயில், சாலை, நெடுஞ்சாலை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களின் நீண்ட கால நிதி தேவைகளைப் பூர்த்திசெய்ய வளர்ச்சி நிதி நிறுவனம் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கைத் தாக்கலின்போது தெரிவித்திருந்தார்.
இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், "மத்திய அரசின் லட்சியத் திட்டமான தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் திட்டத்திற்காக வளர்ச்சி நிதி நிறுவனம் 10 முதல் 12 கோடி லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்யவுள்ளது. இதன்மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் 111 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 6,000 உள்கட்டமைப்புத் திட்டங்கள் புதுப்பிக்கப்படும்" என்றார்.
சாதாரண வங்கிகளால் உள்கட்டமைப்புத் திட்டங்களின் நீண்ட கால நிதி தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதை மேற்கோள்காட்டி பேசிய நிர்மலா, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான தேசிய வங்கி 2021 மசோதாவை நிறைவேற்ற மக்களவை உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
வளர்ச்சி நிதி நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய நிர்மலா, "கிரீன்ஃபீல்ட் மற்றும் பிரவுன்ஃபீல்ட் உள்பட 6,000 பைப்லைன் திட்டங்களைச் செயல்படுத்த 111 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இதனைப் பூர்த்திசெய்ய முடியாது. அப்படி, மக்களின் வரிப்பணத்தையும் அரசின் நிதியை மட்டுமே நம்பினால் இந்த 6,000 திட்டங்களைச் செயல்படுத்த 100 ஆண்டு காலமாகும்" என்றார்.