ஆந்திரா: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்றுகளின் காரணங்களால் நாட்டிலுள்ள வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதற்கிடையே அண்மையில் கரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு விலக்கிக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.அளவிற்கு அதிகமான பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் திருப்பதி தேவஸ்தானமும் திணறிப் போனது. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி, ஏராளமான தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று (ஏப்.14) குவிந்திருந்தனர். அத்துடன் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால், அங்கு பக்தர்கள் தங்கும் 30 அறைகளும் நிரம்பியுள்ளன. இதனால், கிட்டத்தட்ட 40 மணிநேரமாக, திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர்.
இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக, திருப்பதியில் நேற்று (ஏப்.13) புதன்கிழமையன்று மட்டும் 88,748 பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் உண்டியலில் ரூ.4.82 கோடி காணிக்கை வசூல் ஆகியுள்ளது.
இதையுன் படிங்க: திருமலை - திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் காயம் - 5 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து!