டெல்லி: தலைநகர் டெல்லியின் பஜன்புரா சௌக் பகுதியில் உள்ள இரண்டு மத வழிபாட்டுத் தலங்கள், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02ஆம் தேதி) அதிகாலையில் இடிக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களில் ஒரு கோயில் மற்றும் ஒரு தர்கா அல்லது மசூதி அடங்கும். சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பொதுப்பணித்துறையின் ஒரு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாப்புப் படையினரின் உதவி உடன், ஞாயிற்றுக்கிழமை ( ஜுலை 02ஆம் தேதி) காலை 6 மணி அளவில், இந்த இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
டெல்லி வடகிழக்கு பிரிவின் காவல்துறை துணை கமிஷனர் ஜாய் என் திர்கே கூறியதாவது, 'சஹாரன்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இந்த மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன. கோயில் மற்றும் மசூதி இடிப்புச் சம்பவங்களின்போது, விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் ஏதும் நேராத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் அந்தப் பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தது.
இந்த இடிப்பு நடவடிக்கை, அமைதியான முறையில் நடைபெற்றது என' அவர் தெரிவித்து உள்ளார். இருப்பினும், டெல்லி மாநில பொதுப்பணித் துறை (PWD) அமைச்சர் அதிஷி, டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவிடம், இந்த, நடவடிக்கையை நிறுத்தக் கோரி இருந்தார்.
“டெல்லி துணைநிலை ஆளுநரே, சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள கோவில்கள் மற்றும் பிற மதக் கட்டடங்களை இடிக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு கோரி நான் உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.. ஆனால் இன்று( ஜூலை 02ஆம் தேதி) , உங்கள் உத்தரவின் பேரில் மீண்டும் பஜன்புரா பகுதியில் ஒரு கோவில் இடிக்கப்பட்டது," என்று, அதிஷி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய மதக் கட்டமைப்புகளை இடிக்க வேண்டாம் என்று டெல்லி துணைநிலை ஆளுநரிடம் அவர் மேலும் 'கோரிக்கை' விடுத்து உள்ளதாக, அதிஷி தெரிவித்து உள்ளார். கடந்த வாரம், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (MCD) அமைப்பு, மண்டவாலி பகுதியில் உள்ள சனீஸ்வரன் கோயிலுக்கு வெளியே, சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த கட்டடங்களை அகற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மீண்டும் ஊருக்குள் புகுந்த மக்னா - அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்