டெல்லி: சரோஜினி நகரில் உள்ள பிரபல 5 நட்சத்திர விடுதியான லீலா பேலஸ்க்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வந்த நபர், தான் ஒரு ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரி என்று கூறி அறை எடுத்து தங்கி உள்ளார். மேலும் ஹோட்டல் ஊழியர்களை நம்ப வைக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை அட்டை மற்றும் பிசினஸ் கார்டு ஆகியவற்றை சமர்பித்ததாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு அதிகாரி என நம்பிய ஹோட்டல் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை வழங்கி உள்ளனர். ஏறத்தாழ 3 மாதங்கள் தங்கிய நபர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு அறைக் கட்டணமாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தி உள்ளார்.
மேலும் மீதமுள்ள 23 லட்சத்து 48 ஆயிரத்து 413 ரூபாய்க்கு காசோலை வழங்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அந்த நபர் ஹோட்டல் அறையை காலி செய்து கிளம்பிய நிலையில் நவம்பர் 22ஆம் தேதி ஹோட்டல் நிர்வாகத்திற்கு பணம் கிடைக்கும் வகையில் காசோலை கையொப்பமிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹோட்டல் நிர்வாகம் வங்கியில் காசோலையை செலுத்திய நிலையில், போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரில், மர்ம நபர் வழங்கிய பிசினஸ் கார்டில் உள்ள ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யான் என்ற அவரது பெயரைக் கொண்டு வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: WEF 2023: டாப் 30 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் தெலங்கானா CM-ன் மகன்