டெல்லி: தலைநகர் டெல்லி வார இறுதி நாள்களில் ஊரடங்குக்கு தயாராகிறது. இந்த நடைமுறை நாளை (ஏப்.16) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக முழுமையான வழிகாட்டு நடைமுறைகள் வெள்ளிக்கிழமை வெளியாகக் கூடும்.
இது குறித்து மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “மாநிலத்தில் கோவிட் விதிமுறைகள் கடுமையாக்கப்படும். கோவிட் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பா உள்ளிட்ட அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்படும்.
சினிமா திரையரங்குகளில் 30 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். ஹோம் டெலிவரி சேவைக்கு அனுமதி உண்டு. மேலும், ஒரு மண்டலத்தில் ஒரு நாளைக்கு ஒரு சந்தைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
டெல்லியில் கரோனா பரவல் தீவிரமாக அதிகரித்துவருகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்ஜிஸன் வசதி கொண்ட படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.
அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நகரில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். பொதுவாக, வார நாள்களில், மக்கள் சம்பாதிக்க வெளியே செல்கிறார்கள். ஆனால், வார இறுதி நாள்களில், மக்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வெளியே செல்கிறார்கள். எனவே, இதனை உடைக்க இறுதி கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன” என்றார்.
டெல்லியில், கடந்தாண்டு மார்ச் 22 முதல் மே 18ஆம் தேதி வரை முழுமையான பூட்டுதல் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இது மே 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது என்பது நினைவு கூரத்தக்கது.