மும்பை: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மீண்டும் தனது சமூக விரோதச் செயல்களை செய்யத் தொடங்கியுள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், மும்பைக்கு ஹவாலா மூலம் 25 லட்சம் ரூபாய் பணம் பயங்கரவாதச் செயல்களுக்காக சூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக தகவலும் கிடைத்தது.
மேலும், நான்கு ஆண்டுகளில் மொத்தம் 12 கோடி ரூபாய் பயங்கரவாதச் செயல்களுக்காக வரவழைக்கப்பட்டதும் தெரியவந்தது. அதையடுத்து, மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் மீண்டும் மும்பையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பணம் மும்பைக்கு துபாய் மற்றும் சூரத் வழியாக 'D' நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தாவூத் இப்ராஹிம், சோட்டா சகீல், அவரது மச்சான் முகமது சலீம் குரேசி என்கிற சலீம் ஃப்ரூட், ஆரிப் அபு பக்கர் சேக் மற்றும் சபீர் அபுபக்கர் சேக் ஆகியோர் மீது வழக்குப்பதிந்துள்ளது.
மும்பையில் பயங்கரவாதச்செயல்கள் செய்ய 25 லட்சம் ரூபாய் பணத்தை தாவூத் இப்ராஹிம் அனுப்ப முயன்ற போது இந்தத் தகவல்கள் அனைத்தும் என்ஐஏ-விற்கு கிடைத்துள்ளது. இந்தப் பணத்தை ஒரு தாவூத் தரப்பினர் ஓர் ’Code'-ஐ வைத்து அனுப்ப முயன்றுள்ளனர்.
கடந்த மே மாதம் சட்டவிரோதமாக ஒருவர், தாவூத்தின் பயங்கராவாத செயல்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தின் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பதியப்பட்டது.
இந்த வழக்கில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிமும் அவரது கூட்டாளி சோட்டா சகீலும் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பை உட்பட மகாராஷ்டிராவிலுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த மே மாதம் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.
இதில், தாவூட் இப்ராஹிமின் கூட்டாளியான சோட்டா ராஜனின் மச்சான் சலிம் ஃப்ரூட், ஆரிப் அபுபக்கர் சேக், சபீர் அபுபக்கர் சேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தாவூத்தின் 'D' நிறுவனம் மீண்டும் மும்பையில் ஓர் பயங்கரவாத சிண்டிகேட்டை நிறுவ முயற்சிப்பதாக என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: நான் தூக்கிட்டுக்கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்